சனி, 4 ஆகஸ்ட், 2012
ஆறுமுகநாவலர்
Do you like this story?
நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.
சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.அவர் தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர்.
வெள்ளைக்காரர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தமது மதக் கொள்கைகளைப் பரப்பவும் கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். இதற்காகவே பாடசாலைகளையும் நிறுவினர்.
வெள்ளையரின் செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சைவம் நலிவுற்ற நிலையில் சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர்.
இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது.
அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க முற்பட்டவர்.
சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது.
தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும்
சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.
கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். அவரது வாழ்வின் இலட்சியமே இதுவாக இருந்தது.
நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது.
1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது.
அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது.
21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானை அவரது குரு பூசை தினத்தில் நினைத்து வழிபட்டு அவர் பெருமை பேசுவோமாக.

This post was written by: Franklin Manuel
Franklin Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 Responses to “ஆறுமுகநாவலர்”
கருத்துரையிடுக